Saturday, January 8, 2022

பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர் விபரம் சேகரிப்பு

07.01.2022
உடுமலை:நடப்பு கல்வியாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் விபரம் பள்ளிகள் தோறும் கோரப்பட்டுள்ளது.பொதுத்தேர்வின் போது சலுகை தேவைப்படும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை இயக்கம் அறிவித்துள்ளது. அதன்படி, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தங்களுக்கு தேர்வு எழுத உதவியாளர் உள்ளிட்ட ஏதேனும் சலுகைகள் தேவைப்பட்டால் தலைமையாசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்.நோயின் தன்மை, எந்த மாதிரியான சலுகைகள் தேவைப்படும் என்று உரிய மருத்துவ சான்றுடன் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.அவ்வகையில் உடுமலை கல்வி மாவட்டத்தில், தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறுமாறு, தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:உடுமலை கல்வி மாவட்டத்தில், மேல்நிலைப்பள்ளிகளாக, 16 அரசு பள்ளிகள்; 5 அரசு உதவிபெறும் பள்ளிகள், 15 தனியார் மெட்ரிக் பள்ளிகள், 4 சுயநிதி பள்ளிகள் உள்ளன. இதேபோல், நடுநிலைப்பள்ளிகளாக, 17 அரசுப்பள்ளிகள், 5 அரசு உதவிபெறும் பள்ளிகள், 18 மெட்ரிக் பள்ளிளக், 6 சுயநிதி பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகளில் இருந்து மாற்றுத்திறனாளி மாணவர்களின் விபரம் கோரப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், தங்களுக்கான தேர்வு எழுதுபவரை நியமிக்கலாம்.அவர்களுக்கு, தேர்வு எழுதுவதற்கான காலஅவகாசம் ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படுகிறது. காதுகேளாதோர், வாய் பேச முடியாதோர், மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகள், இரண்டு மொழிப்பாடங்களில், ஏதேனும் ஒன்றை மற்றும் தேர்ந்தெடுத்து எழுதலாம்.இதேபோல், நரம்பியல் கோளாறு, கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள் தேர்வின் போது கால்குலேட்டர், கிளார்க் அட்டவணை பயன்படுத்தலாம். 10ம் வகுப்பு மாற்றுத்திறனாளிகள் அறிவியல் செய்முறை தேர்வில் இருந்து விலக்கு அளிக்க அனுமதி கேட்கலாம். சலுகைகள் குறித்து மாணவர்களிடம் தலைமையாசிரியர்கள் எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


No comments:

Post a Comment